பின்னடைவுகள்: செழிப்பா அல்லது துன்பமா?

Setbacks (Prosperity or Adversity) - Tamil Translation

Dr Poh Boon Sing

6/5/20241 min read

woman in black and white floral shirt and blue denim jeans sitting on brown wooden bench
woman in black and white floral shirt and blue denim jeans sitting on brown wooden bench

சமீபத்திய நாட்களில் நீங்கள் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் முன்னேற்றம் போன்ற மகிழ்ச்சிக்குரிய அனுபவங்களை அனுபவித்திருக்கின்றீர்களா? அல்லது நீங்கள் ஏமாற்றங்கள், தோல்விகள், காயங்கள் மற்றும் பிரிவினைகள் போன்ற துக்கத்திற்கு நேரான அனுபவங்களை சந்தித்திருக்கிறீர்களா?

வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் மிகவும் வேதனையை அளிப்பதாக இருக்கும். நீங்கள் ஆழமான காயங்களையோ அல்லது பெரும் ஏமாற்றங்களையோ அனுபவித்திருந்தால், அதையே மீண்டும் அனுபவிக்கும் நிலை ஏற்படுமாயின், அதன் நிமிர்த்தம் நீங்கள் அதிகம் நடுங்குவீர்கள்.

சிதைந்து போன வாழ்க்கையை கொண்டிருந்த ஓர் குறிப்பிட்ட மனித சமூகத்தைப் பற்றி கடவுளுடைய புத்தகமாகிய பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் அந்தக் கூட்டத்தினர் மீண்டுமாக வாழ்வடைந்து வெற்றியுடன் வாழ்ந்தார்கள். இவ்வாறான வாழ்க்கையும் மாற்றமும் எதிர்வரும் நாட்களில் உங்களுடைய சொந்த அனுபவமாகக் கூட அமையலாம்.

சிதைந்து போன வாழ்க்கையை கொண்டிருந்த இஸ்ரேல் எனும் சமூகம்

இஸ்ரேல் எனும் சமூகத்தின் வரலாற்றை நோக்குவோமாகில் தோல்விகள், சீர் கெட்டுப்போன சமூகக் கட்டமைப்புக்கள், மற்றும் ஒடுக்குமுறைகள் போன்ற காரணிகளினால் சிதைந்து போன வாழ்வினை கொண்ட ஓர் கூட்டமாக இந்தக் குறித்த சமூகம் காணப்பட்டது. அவர்கள் கொண்டிருந்த மகிழ்ச்சிக்குரியதும் மகிமைக்குரியதுமான காலங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கவில்லை. ஆம் மீண்டும் ஓர் அந்நிய ஆதிக்கமாகிய ரோமர்களின் அதிகாரத்துக்குட்பட்டு வாழ வேண்டிய ஓர் இருள்மயமான சூழல் இந்தச் சமூகத்துக்கு ஏற்பட்டது! ரோமானியர்கள் இவர்களை காலனித்துவப்படுத்தினர். பல யூதர்கள் அடக்குமுறையாளர்களுக்கு கைக்கூலிகளாக மாறி தன்னுடைய சமூகத்திற்கே துரோகிகளாக செயல்பட்டனர். மதத் தலைவர்கள் வெட்கமின்றி பாசாங்குத்தனமாக நடந்து, பலவீனமானவர்களைச் சுரண்டுபவர்களாக இருந்தனர். நானூறு ஆண்டுகளாக சிதைந்து போன வாழ்வினை கொண்டிருந்த இந்த மக்களின் ஆறுதலுக்காக எந்த தீர்க்கதரிசியும் அந்நாட்களில் பேசவில்லை. ஒரு தெய்வீகம் பொருந்தின நபர் தங்களுக்காக வருவார் எனும் அந்த நல்ல நாளுக்காக ஏங்கிய வண்ணம் காணப்பட்டனர்.

சிதைந்து போன சமூகத்தின் வாழ்வு சீர் பெறும் காலம் வந்துவிட்டது

அப்போது, இதோ, இந்த இருள்மயமான சமூகத்தின் வாழ்வில் ஒரு ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. ஆம், கடவுளின் குமாரகுமாரன் என வெளிப்பட்ட ஒருவர்அதிகாரத்துடன் கற்பிக்க ஆரம்பித்தார். அவர் அற்புதங்களைச் செய்தார், பாவிகளை மனந்திரும்பும்படி அழைத்தார், மேலும் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு பரலோக வாழ்க்கையெனும் நிலையான வாழ்வினை தருவதாக வாக்களித்தார். அந்த நபர் வேறு யாருமல்ல இயேசு கிறிஸ்து என்பவரே. அவரின் தெய்வீக வார்த்தைகளை ஏற்றுக் கொண்டோர் அவரில் நம்பிக்கை வைத்து, அவரிடம் கற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்றினார்கள். இந்த இயேசுவானவர் ஆச்சரியப்படும் விதமாக, தமக்கு வரவிருக்கும் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தொடங்கினார்.

சிறிது காலத்திலேயே இயேசுவானவர் தன்னைக் குறித்து சொன்ன காரியங்கள் நடக்க ஆரம்பித்தன! இயேசு கிறிஸ்து காட்டிக் கொடுக்கப்பட்டார், கைது செய்யப்பட்டார், அவமானமாக நடத்தப்பட்டார், இறுதியாக இரண்டு குற்றவாளிகளுக்கு நடுவே நிர்வாணமாக சிலுவையில் அறையப்பட்டார். சீடர்கள் குழப்பமடைந்து சிதறியோடினர். அவர்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தகர்ந்து போனது. அவர்களில் ஒருவன் அவரது உடலைக் கேட்டு, பயன்படுத்தப்படாத கல்லறையில் அவரை அடக்கம் செய்தான், பின்னர் ரோமானிய வீரர்களால் அந்தக் கல்லறை சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

காரியங்கள் இப்படி இருக்க, என்ன ஆச்சரியம்! ஆம், மூன்றாம் நாள் கல்லறை காலியாக காணப்பட்டது! அவர்களின் குருவாகிய இயேசுவானவர் உயிர்த்தெழுந்தார், அவர் உயிர்த்தெழுந்து மனித கண்களில் காணப்பட்டார். அவரின் மரணத்தின் நிமித்தம் சோர்ந்து போய் கூடியிருந்த சீடர்கள் மத்தியில் விரைவில் தோன்றி, அவர்களுடன் பேசி, அவர்களுடன் உணவு அருந்தினார். மொத்தத்தில், 500 க்கும் மேற்பட்ட மக்கள் நாற்பது நாட்களில் பல்வேறு நேரங்களில் உயிர்த்தெழுந்த இயேசுவை தங்கள் கண்களால் கண்டார்கள். அதன்பின்னர் மனிதர்களுடைய கண்கள் காணத்தக்கதாக வெளியரங்கமாய் பரலோகம் சென்றார், மேலும் உலகத்தை நியாயந்தீர்க்க அவர் திரும்பி வருவார் என்று உறுதியளித்தார்.

இயேசுவானவர் தன்னுடைய சீடர்களுக்கு கூறிய யாவுமே நடைபெற்று முடிந்தன.சீடர்களும் தெளிவடைந்தனர். ஆம் அவர் மனிதர்களால் துன்புறுத்தப்படுவார், கொல்லப்படுவார் ஆனாலும் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திருப்பார் என்று சொல்லப்பட்ட யாவுமே நடந்தேறியதனால் சீடர்கள் தெளிவுற்றனர். இயேசு இறக்கக்கூடாது என விரும்பிய அதே சீடர்கள், இப்பொழுதோ அவர் இறந்தேயாக வேண்டுமெனும் தவிர்க்க முடியாத அவசியத்தை புரிந்து கொண்டனர். ஆம், அவருடைய மரணம் இல்லையெனில், பாவிகளுக்கு இரட்சிப்பு இருந்திருக்காது என்பதை அறிந்து கொண்டனர். அவரை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்காக அவர் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். அவர்களுடைய பாவங்களைச் சுத்திகரிப்பதற்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது. அவருடைய மரணம் அவர்கள் மெய்யான கடவுளுக்கு எதிராக செய்த பாவங்களுக்கான முழுப் பரிகாரமாயிற்று. அவர் தன்னை தன்னுடைய மக்களின் பிரதிநிதியாக வெளிப்படுத்தி அவர்கள் அனுபவிக்க வேண்டிய பாடுகளையும் துன்பங்களையும் தானே அனுபவித்தார்!

இயேசுவானவரைப் பற்றிய இந்த உண்மைகள் சீடர்களினாலே தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டதினால் அவர்கள் இயேசுவின் போதனைகள் மீதும் அவர் மீதும் உறுதியான பற்றும் விசுவாசமும் வைத்தார்கள்.. இயேசு கிறிஸ்து மரணித்த பின்னர் பூமியில் அவர் பௌதீக ரீதியாக அவர்களுடன் இருக்கவில்லை என்றாலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கடுமையான துன்புறுத்தல் தொடர்ந்தாலும், அவர்கள் சோர்ந்து போகவுமில்லை தோற்கடிக்கப்படவுமில்லை.தேவனுடைய ஆவியானவர் அவர்களுக்கூடாக வல்லமையுடன் செயல்பட்டார், அதனால் அவர்கள் அனைவரும் இரட்சிப்பின் செய்தியை தைரியமாகப் பிரசங்கித்தனர்.

அந்தச் செய்தி இன்றும் பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தச் செய்தி என்னவென்றால்;-- ’’இயேசுவானவர் உங்களுடைய பாவங்களை தண்ணிலே ஏற்றுக்கொண்டு எனக்காகப் பாடுபட்டு சிலுவையிலே மரித்தார் .ஆனாலும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்’’ எனும் அந்த நற்செய்திக்கு யாரெல்லாம் தங்களை ஒப்புக்கொடுக்கின்றார்களோ அவர்கள் யாவருக்கும் என்றுமே அழியாத நிரந்தரமான மகிமையின் வாழ்க்கையை கொடுப்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விருப்பமாய் காணப்படுகிறது என்பதாகும்’’.. "அவர்கள் ஜீவனைப் பெறவும், அவர்கள் அதை மிகுதியாகப் பெறவும் நான் வந்தேன்" (யோவான் 10:10). இயேசுவை விசுவாசிப்பதனூடாக மெய்யான கடவுளுடன் ஏற்படுத்துகின்ற உறவின் பலனானது நாம் இந்த பூமியிலே அனுபவிக்கக் கூடிய இன்பங்களுக்கு நிகரானவைகள் அல்ல.(இயேசுவை விசுவாசிப்பதினால் ஏற்படும் வாழ்வு மிகுந்த மேன்மையானது)

சிதைந்து போன உங்கள் வாழ்வானது சீர் பெறுவதற்கும் நம்பிக்கையோடு துன்பங்களை எதிர்கொள்வதற்கும் அன்புள்ள கடவுளாகிய இயேசுவானவரை உங்களின் நேசத்துக்குரிய தெய்வமாக விசுவாசிப்பதே ஒரே வழியாக காணப்படுகின்றது.

வரவிருக்கும் நாட்கள் உங்களுக்கு ஆன்மீக ரீதியில் செழிப்பானதாக இருக்கட்டும்! உங்கள் வாழ்நாள் முழுவதும் இயேசு கிறிஸ்துவின் சமாதானமும் அவருடைய ஏராளமான ஆசிர்வாதங்களும் நிறைந்ததாகவும் இருக்கட்டும்! இயேசு கிறிஸ்து கூறுகிறார், " வருத்தப்பட்டு, சுமை சுமக்கிறவர்களே, எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28). இன்றே அவரிடம் வருவீர்களா?